ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதிர்வுற்ற பத்திரங்கள் வழங்கும் விழாவில் 223 பயனாளிகளுக்கு சுமார் ரூ. 2 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் வழங்கி சிறப்புரையாற்றினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய அவர், கோபிசெட்டிபாளையம் சட்டபேரவைத் தொகுதியில் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால், அவர்களுக்கு வழங்கப்படும் வைப்புத்தொகை நிதி ரூ.2 கோடி அளவில் வழங்கப்பட்டுள்ளது. மக்கள் அலுவலகங்களுக்கு செல்வதைக் காட்டிலும் மக்களை நாடி பணிகள் ஆற்றிவரும் பாங்கு இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டுவருகிறது. பெண்கள் நலனுக்காக இந்தாண்டு நிதிநிலை அறிக்கையில் 78 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வரலாறு படைக்கும் வகையில் தமிழ்நாடு திகழ்ந்துகொண்டிருக்கிறது” என்றார்.