ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் பணிபுரியும் அலுவலர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு சத்து மாத்திரைகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "பள்ளிக் கல்வித் துறையை பொருத்தவரையிலும் 80 விழுக்காடு பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
இதற்காக அச்சகங்களுக்கு சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டு முதலமைச்சரின் ஒத்துழைப்போடு அப்பணிகள் சிறப்பாக செயல்பட்டுவருகிறது. மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பொருள்களான புத்தகப்பை, சாக்ஸ் உள்ளிட்ட பொருள்கள் பள்ளி திறந்த ஒரு வார காலத்திற்குள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் இன்னும் ஒரு தேர்வு பாக்கியுள்ள நிலையில் கரோனாவுக்கு தீர்வு கண்டவுடன் அந்தத் தேர்வு எந்த தேதியில் நடைபெறும் என்பதை முதலமைச்சருடன் கலந்துபேசி பின்னர் அறிவிக்கப்படும். நீட் தேர்வுக்கு இன்று 11 மணியளவில் நியூ பாக்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் அனைவருக்கும் இலவசமாக ஆன்லைன் மூலம் பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.