மருத்துவக் கல்லூரிகள் அதிகம் இல்லாத இடங்களில் ’நீட் தேர்வு’ கொண்டு வருவது சரியாக இருக்கும் - அமைச்சர் முத்துசாமி ஈரோடு: இந்தியாவிலேயே மருத்துவம் படிக்க அதிகமான மாணவர்கள் தமிழ்நாட்டில் இருந்து வருவதை தடுக்கவே நீட் தேர்வால் முட்டுக்கட்டை போடுவதாகவும், இதற்கு மாறாக எங்கு மருத்துவக் கல்லூரிகள் இல்லையோ அங்கு வேண்டுமானால், நீட் தேர்வை கொண்டு வரலாம் என்றும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
கோபிசெட்டிபாளையம் கோபி கலை அறிவியல் கல்லூரியில் 36 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் மற்றும் அரங்கம், வேலை வாய்ப்பு கட்டிடம் திறப்பு விழா இன்று (அக். 28) நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை மற்றும் வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டார்.
பின்னர் மாணவர்களிடையே சிறப்புரையாற்றிய அவர், "தமிழகத்தில் புதுமைப் பெண் திட்டத்தின் மூலமாக 1,332 மாணவிகள் மாதம் ரூ.1000 பெறுகின்றனர். அவர்களுக்கு சுமார் ரூ.96 லட்சம் வழங்கப்பட்டு வருகின்றது. இத்திட்டத்திற்கு பிறகு உயர்க் கல்வியில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
காலை சிற்றுண்டி திட்டம் கொண்டு வந்ததன் மூலம் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தங்களது பிள்ளைகள் மருத்துவராக விரும்பினால், மருத்துவம் படிக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி 6ஆம் வகுப்பு முதலே பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாணவர்களை தயார் செய்து கொண்டு செல்கின்றனர்.
இதையும் படிங்க:அதிமுக - பாஜக கூட்டணி முறிவு; திமுகவின் கணக்கு என்ன? - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரத்யேக தகவல்
இந்த நிலையில் மருத்துவம் பயில 12ஆம் வகுப்பு வரை கற்கும் கல்வி போதுமானதாக இருக்காதா?. அப்படி இருக்கும் பட்சத்தில் நீட் தேர்வைக் கொண்டு வந்ததன் மூலம், 12ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மருத்துவம் படிக்க முடியாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசாங்கத்தை குறை சொல்ல வேண்டும் என நான் இதனை தெரிவிக்கவில்லை.
மாணவ மாணவிகளின் நிலைமையை யோசித்து மாணவர்கள் எந்த மாதிரியான சங்கடங்களுக்கு ஆளாகின்றனர் என்பதை தெரிந்து மத்திய அரசுப் பணியாற்ற வேண்டும். நாம் வைக்கின்ற கோரிக்கைகள் ஏதாவது ஒரு காரணத்திற்காக மறுக்கப்படுகின்ற போது அது மிகப்பெரும் சிரமத்திற்கு ஆளாக்குகின்றது.
மருத்துவக் கல்லூரிகள் அதிகம் இல்லாத இடங்களில் 'நீட் தேர்வு' (NEET Exam) கொண்டு வருவது சரியாக இருக்கும். இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் அதிகமாக மாணவர்கள் மருத்துவம் பயில செல்கின்றனர். ஆகவே, இதனை நம்மிடமிருந்து பறிக்கும் முயற்சியில் ஈடுபடுவதை விட, எங்கு மருத்துவக் கல்லூரிகள் இல்லையோ? அங்கு இதனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும்" என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
இதையும் படிங்க:சாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அரசை எதிர்பார்த்து காத்திருப்பது ஏன்? - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரத்யேக பேட்டி