நீர்நிலைகள் புறம்போக்காக இருந்தால் யாரும் அனுமதி வாங்க முடியாது - அமைச்சர் முத்துச்சாமி திட்டவட்டம் ஈரோடு: ஈரோடு அருகே ரங்கம்பாளையம் தனியார் கல்லூரியில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில், தனியார் நிறுவனங்கள் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை மற்றும் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துச்சாமி பங்கேற்று வேலைவாய்ப்பு முகாம் மூலம் தேர்வு செய்யப்பட்ட பட்டதாரிகளுக்குப் பணி ஆணையை வழங்கினார்.
இதை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துச்சாமி, "தமிழக அரசு, மிக்ஜாம் புயல் பாதிப்பு கருத்தில் கொண்டு அனைத்து விதத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை சிறப்பாக எடுத்துள்ளது. புயல் அறிவிப்புக்கு முன்பே மழைநீர் தேங்கும் இடம் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கத் தான் 4ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. 47ஆண்டுகளுக்கு முன்பு தான் இதுபோன்ற மழை பெய்துள்ளது.
மேலும், மழைநீர் வடிகால் பணிகள் 60சதவீதம் நிறைவடைந்துள்ளது. வடிகால் பணிகள் முழுவதும் முடிந்து இருந்தால் பாதிப்பு ஏற்பட்டு இருக்காது. இதிலும் மழைநீர் தேங்கி உள்ள பகுதிகளில் வடிகால் பிரச்சினை உடனுக்குடன் சரிசெய்யப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் புயல் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21குழு அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
47 ஆண்டுகளாக இல்லாத அளவில் மழை பெய்ததை அடிப்படையாகக் கொண்டு தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு எந்தெந்த இடங்கள் என ஆய்வுகள் செய்து அறிக்கை அளிக்குமாறு, முதல்வர், அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், "அரசு வடிகால் அமைத்த போதிலும் மழைநீர் விரைந்து வடியாததற்குப் பொதுமக்கள் நீர்நிலைகள் செல்லும் வழியில் குப்பைகளைக் கொட்டுவது தான் பிரச்சினையாக அமைந்துள்ளது. மழைநீர் வழிகளில் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. இதனை நான் பொதுமக்கள் மீது குற்றச்சாட்டு சொல்லவில்லை தயவுசெய்து வேண்டுகோளாக விடுகிறேன்" என கூறினார்.
இதன் தொடர்ச்சியாக, சேலம் மார்டன் தியேட்டர் விவகாரத்தில் தியேட்டர் உரிமையாளரின் 3 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு என்று வீட்டு வசதி வாரியத்தின் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "இது குறித்து வீட்டு வசதி வாரியத்தின் அதிகாரிகளிடம் விசாரித்துக் கேட்டுச் சொல்லுகிறேன். வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தம் இல்லை என்றால் ஒன்றும் செய்ய முடியாது. யாரையும் பழிவாங்கும் நோக்கம் அரசுக்கு இல்லை." என்று தெரிவித்தார்.
அதனை அடுத்து சென்னை கூவம் ஆற்றின் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்ட அனுமதி வழங்கியதாக அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியது குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, "நீர்நிலை பகுதியாக இருந்தால் அரசு கண்டிப்பாக நடவடிக்கை எடுத்து இருக்காது, அனுமதியும் வழங்கி இருக்காது. மேலும், நீர் நிலை புறம்போக்காக இருந்தால் யாரும் அனுமதி வாங்க முடியாது" என்று திட்டவட்டமாக அமைச்சர் முத்துச்சாமி தெரிவித்தார்.
இதையும் படிங்க:அம்பத்தூர் ரயில் நிலையம் அருகே மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட தொழிலாளி!