ஈரோடு:சக்தி நகர் கூட்டுறவு நியாய விலை கடையில் நடைபெற்ற பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு பொருட்களை வழங்கினார்.
ஈரோடு அருகே உள்ள சக்தி நகர் கூட்டுறவு நியாய விலை கடையில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் இன்று (ஜனவரி 10) பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு பொருட்களுடன் 1000 ரூபாயும் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி, “ஈரோடு மாவட்டத்தில் 7.68 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சக்கரை, கரும்பு மற்றும் 1000 ரூபாயும் வழங்கப்படுகிறது. தமிழக முழுவதும் 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு இத்தொகுப்பு இன்று (ஜனவரி 10) முதல் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்ததையடுத்து முதலமைச்சர் அதற்கான நடவடிக்கை எடுத்துள்ளார். இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்” என கூறியுள்ளார்.
இரண்டு நாள் சாதனை: தொடர்ந்து உலக முதலீட்டாளர் மாநாடு குறித்து அவர் பேசுகையில், “இரண்டு தினங்களுக்கு முன்பு நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில் 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் 31 நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. இது 27 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும். இதன் மூலம் சுமார் 7 லட்சம் கோடி ரூபாய் முதலீடு உறுதி செய்யப்பட்டுள்ளது.