மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துச்சாமி செய்தியாளர்கள் சந்திப்பு ஈரோடு: ஈரோடு மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட திருநகர் காலனி அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் பொதுமக்கள் குறைத்தீர்ப்பு முகாமிற்கு மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துச்சாமி சென்றார். பின்னர், அதனை நேரில் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி, “ஈரோடு மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் முகாமின் கீழ் 10 ஆயிரம் மனுக்கள் பொதுமக்களிடம் பெறப்பட்டு, ஏறக்குறைய மனுக்கள் மீது தீர்வு காணும் பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழக அரசின் பேரிடர் மீட்பு நடவடிக்கைகள் குறித்து தவறான செய்தியை, மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார்.
வெள்ளம் மற்றும் கனமழையால் பாதித்த தென் மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தனியாக ஆய்வு செய்து, அமைச்சர்களுக்கு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். மழைநீர் வடிகால் பணிகள் குறித்து சரியான புரிதல் இல்லாமல், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவித்து வருகிறார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்னும் சில இடங்களில் பிரச்னை உள்ளது. ஆனால், ஒட்டு மொத்தமாக குறைபாடு உள்ளது என்பது ஏற்க முடியாத ஒன்று. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களை ஒருங்கிணைத்து, மழைநீர் வடிகால் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க முதலமைச்சர் நினைத்து வருகிறார்.
தென் மாவட்டப் பகுதியில் வெள்ளத்தால் சேதமடைந்த விவசாய விளை நிலத்திற்கு ஏற்ப, கூடுதலாக நிவாரணம் வழங்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார். மழை, வெள்ளம் காரணமாக சேதமடைந்துள்ள வீடுகள், வீட்டுவசதி வாரியத்தின் கீழ் என்று எதுவும் இல்லை. இருப்பினும், குடியிருப்புகளில் உள்ள பொதுமக்களுக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சரியான முறையில்தான் பேசி வருகிறார். இதில் தவறு இருப்பதாக சொன்னால், அதற்கும் விளக்கம் அளிக்கிறார்” என்றார். தொடர்ந்து, அடுத்தடுத்து அமைச்சர்கள் சிறைக்கு செல்வார்கள் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சொல்வது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ’அவர் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சொல்லி வருகிறார்’ என தெரிவித்தார்.
இதையும் படிங்க:கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு கேக் தயாரிக்கும் பணி தீவிரம்...நீலகிரியில் களை கட்டும் வியாபாரம்!