ஈரோடு: எப்படியாவது மது அருந்துபவர்களைக் குடிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அரசு இலக்கு நிர்ணயம் செய்வது இல்லை என்றும், தவறான வழியில் சென்று தவறு நிகழ்ந்துவிடக் கூடாது என்பதற்கான முயற்சிதான் இலக்கு நிர்ணயம் எனவும், மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 5வது வார்டு பகுதியில் மொக்கயம்பாளையம் முதல் கொளத்துபாளையம் சாலையில் உள்ள ஓடையின் குறுக்கே, 1 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் கட்டுதலுக்கான திட்டப் பணிகள் நேற்று (ஜன.05) நடைபெற்றது. இதில், மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி பங்கேற்று, பூமி பூஜை செய்து திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி, "மக்களுடன் முதல்வர் திட்டம், அரசியல் நோக்கமோ அல்லது விளம்பர நோக்கத்திற்காகவோ செய்யவில்லை. மக்கள் தங்கள் கோரிக்கை மனு மீதான அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்ற வகையில்தான் பணிகள் செய்யப்பட்டு வருகிறது. பொது இடங்களில் மது அருந்தும் சம்பவம் குறித்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சில இடங்களில் மது அருந்துவதால் நிகழும் குற்றச் சம்பவங்கள் குறித்து, அரசு மீது சொல்லும் குற்றச்சாட்டு ஏற்புடையதல்ல. தனிப்பட்ட முறையில் நிகழும் குற்றச் சம்பவத்தின் பின்னணி, போலீசார் விசாரணையில்தான் தெரிய வரும். மேலும், மது அருந்த வருபவர்களை எப்படியாவது குடிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அரசு இலக்கு நிர்ணயம் செய்யவில்லை.