ஈரோடு: அரச்சலூர் பேரூராட்சியில் நடைபெறும் 'மக்களுடன் முதல்வர்' முகாமை அமைச்சர் முத்துச்சாமி இன்று (டிச.20) நேரில் ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் முத்துசாமி, “பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மற்றும் மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்து முதல்வர் கேட்டால், எப்போதும் தாயார் நிலையில் இருக்க வேண்டும் என கருதி மக்களுடன் முதல்வர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் 87 மக்களுடன் முதல்வர் முகாம் நடத்த திட்டமிடப்பட்ட நிலையில், 21 முகாம்கள் நிறைவடைந்தது. இதில் 5 ஆயிரத்து 202 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டு, அம்மனுக்கள் அந்தந்த துறைக்கு அனுப்பப்பட்டு, துறையின் கீழ் நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மனுக்கள் மீது 30 நாட்களில் தீர்வு காண வேண்டும் என்ற அடிப்படையில், மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல்வர் டெல்லி பயணத்தில் தமிழகத்திற்கான வெள்ள நிவாரணம் குறித்து பிரதமரிடம் கேட்கும் திட்டம் இருந்தது.
அதுமட்டுமல்லாமல், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்பட அமைச்சர்கள் தென் மாவட்டங்களில் இருந்து நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ளனர். முதல்வர் டெல்லி பயணம் அரசியல் சார்ந்த குற்றச்சாட்டுகளாகத்தான் உள்ளது, முதல்வர் சரியான நடவடிக்கை எடுத்து வருகிறார்.