ஈரோட்டில் வீடு வீடாக சென்று திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஈரோடு:ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 25-வது வார்டு கமலா நகர் மற்றும் ராமமூர்த்தி நகரில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வீடு வீடாகவும் சென்று தீவிர திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது ஆரத்தி எடுத்த பொதுமக்களிடம் இருந்து தட்டுகளை வாங்கி ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குத் தான் கண் பட்டு இருக்கிறது என கூறி பொதுமக்களுக்கு ஆரத்தி எடுத்து பொட்டு வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திமுக ஆட்சியின் சாதனைகளை எடுத்துக் கூறி திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்குகளைச் சேகரித்து வருகின்றோம். இந்த ஆட்சி குறித்தான மதிப்பீடுகளில் மக்கள் மிகவும் திருப்திகரமாக இருக்கிறார்கள். இந்த ஆட்சியின் திட்டங்களும், முதலமைச்சரின் பணிகளும் வாக்காளர்களுக்கு மகிழ்ச்சியான மனநிலையை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏறத்தாழ 400 கோடி ரூபாய் மதிப்பில் ஈரோடு மாநகராட்சியில் கடந்த ஒன்றரை ஆண்டுக் கால ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. ஈரோடு மாநகராட்சியில் எந்த பகுதிக்குச் சென்றாலும் மழை நீர் வடிகால் பகுதி பாதாள சாக்கடை விரிவாக்கப் பணி என ஏராளமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதனால் சாலைகள் கூட சில இடங்களில் சேதம் அடைந்திருக்கின்றன.
பாதாள சாக்கடையும் புதிய மழைநீர் வடிகால் பணியும் முடிவுற்றால் மீண்டும் அந்த சாலைகள் புதுப்பித்துத் தரப்படும். அந்தப் பணிகளுக்கும் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்தவுடன் அந்த பணிகளும் செய்யப்படும். ஈரோடு மாநகராட்சி ஒரு மிகச்சிறந்த மாநகராட்சியாக வருவதற்கு அனைத்து கட்டமைப்புகளையும் மேம்படுத்த முதலமைச்சர் 400 கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை மேற்கொண்டிருக்கின்றார்.
அதிமுக ஆட்சியில் முதியோர் உதவித்தொகை வழங்குவதில் பல கட்டுப்பாடுகள் கொண்டு வந்தனர். குறிப்பாக ஆதரவற்ற முதியோர்களாக இருந்தாலும் ஆண் வாரிசு இருக்கக் கூடாது என்ற ஒரு விதியை கொண்டு வந்திருக்கிறார்கள். அதனால் ஏழரை லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை மாற்றுத் திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்டவர்களுக்கு என சிலருக்கு உதவித் தொகை நிறுத்தப்பட்டது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு உரியவர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும். ஆண் வாரிசு இருந்தாலும் ஆதரவற்றவர்களாக இருந்தால் நிதி வழங்க வேண்டும் என கணக்கெடுக்கப்பட்டு ஏற்கனவே வாங்கிக் கொண்டிருந்து நிறுத்தப்பட்டவர்களுக்கு அனைத்து வருவாய் அலுவலகங்களிலும் கணக்கெடுக்கப்பட்டு உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதிமுகவின் வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுதான்.. அவைத்தலைவர் சுற்றறிக்கை..