ஈரோடு: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் இரண்டாவது முறையாகப் பதவியேற்றதிலிருந்து, முதன்முறையாக அமைச்சரவை கடந்த ஜூலை 8ஆம் தேதி மாற்றியமைக்கப்பட்டது. அப்போது தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன் உள்ளிட்ட 43 பேர், மத்திய அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டைப் பூர்விகமாகக் கொண்ட எஸ். ஜெய்சங்கர் ஆகியோர் முக்கியத் துறைகளின் அமைச்சர்களாக இருப்பினும், அவர்கள் தமிழ்நாட்டின் பிரதிநிதிகளாகக் கருதப்படவில்லை. இந்நிலையிலேயே மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் எல். முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
பட்டியலினத்துக்குப் பெருமை சேர்ப்பு
தற்போது தமிழ்நாடு முழுவதும் பாஜக அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டுசேர்க்கும் வகையில், மக்கள் ஆசி யாத்திரையை மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தொடங்கியுள்ளார். இந்நிலையில் அவர் நேற்று (ஆகஸ்ட் 17) ஈரோடு மாவட்டத்தில் ஆசி யாத்திரையை மேற்கொண்டார்.
அப்போது ஈரோடு காளைமாட்டு சிலை அருகே எல். முருகனுக்கு, பாஜக மாநில நிர்வாகி விநாயக மூர்த்தி தலைமையிலானோர் பூரண கும்ப வரவேற்பு அளித்து வரவேற்றனர். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் அவரை வரவேற்று உரையாற்றினார்.