ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட ஒடையாக்கவுண்டன்புதூரில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் ரூ. 38.17 கோடி மதிப்பீட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் 384 வீடுகள் கட்டப்படும் கட்டடப் பணியை தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் இன்று தொடங்கி வைத்தார்.
பின்னர் நிகழ்வில் பேசுகையில், " சாலை பணிகளைக் காட்டிலும் மக்கள் குடியிருப்பு முக்கியம் என்ற நிலையில் இந்த இடம் எடுக்கப்பட்டுள்ளது. இன்று குடிசையில் வாழ்ந்து வரும் மக்கள் மாடி வீட்டில் குடியேற வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாத காலத்திற்குள் 5 ஆயிரம் பேருக்கு சொந்த வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கொடிவேரி அணையில் செயற்கை கடற்கரை உருவாக்கப்படவுள்ளது" என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "பள்ளி திறப்பது குறித்து முதலமைச்சர் அறிவிப்பார். 11ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து கல்வியாளர்களின் கருத்து கேட்கப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் என்றார்.