ஈரோடு மாவட்டம் கோபி சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் செங்கோட்டையன் போட்டியிடுகிறார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் செங்கோட்டையன் முக்கிய தொழில் அதிபர்கள், பல்வேறு சமூக தலைவர்கள், விவசாய அமைப்பு நிர்வாகிகள் என பலதரப்பட்டவர்களை சந்தித்து தனக்கு ஆதரவாக வாக்கு கேட்க தொடங்கினார்.
அமைச்சர் செங்கோட்டையனின் பரப்புரை இந்நிலையில், இன்று (மார்ச் 19) கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கரட்டூர் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அதன் பின் கரட்டூர், ஜெ.ஜெ.நகர், நாய்க்கன்காடு, பச்சமலை அடிவாரம், ஜோதிநகர் உள்பட பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.
இதைத்தொடர்ந்து நாய்க்கன்காடு பகுதியில் பரப்புரையில் ஈடுபட்ட அமைச்சர் செங்கோட்டையன், “வருகின்ற தேர்தல் மக்களாகிய உங்களுக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் தேர்தலாக இருக்கும். குடும்பத்தலைவி ஒவ்வொருவருக்கும் மாதத்தோறும் ரூ.1, 500 கொடுக்கப்படும்.
நியாயவிலை கடைகளிலேயே இலவச சிலிண்டர்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். கோபிசெட்டிபாளையம் பகுதி ரூ. 21 கோடியில் அழகுப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நாங்கள் எடுக்க போகும் நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் அனுப்ப அதிமுக ஐடி விங் மூலம் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நான் உங்கள் வீட்டு பிள்ளையாக இருந்து செயலாற்றிகொண்டிருக்கிறேன். உங்கள் இல்லத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்விற்கும் வந்துள்ளளேன். அமைச்சர் என்ற முறையில் இல்லை, உங்கள் சகோதரனாக வந்துள்ளளேன். என்னை வாழ வைக்கின்ற உங்களுக்கு மீண்டும் நற்பணிகளை ஆற்றுவதற்கு வாய்ப்பு தாருங்கள்” என்றார்.