ஈரோடு: மறைந்த ஜெ.ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது, தேர்தல் பிரசாரத்திற்குப் பிறகு, முன்னாள் சபாநாயகர் பி.தனபால் அவரது வீட்டில் ஏற்பாடு செய்திருந்த விருந்தில் அதிமுகவில் பல முக்கிய அமைச்சர்களும் பங்கேற்காததாக கூறப்படுகிறது. இதனிடையே, எடப்பாடி பழனிசாமி இந்த விருந்தில் பங்கேற்காமல் புறக்கணித்து விட்டு தற்போது 'மாமன்னன்' படத்தில் பட்டியலின மக்களை குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளதாக கூறுவதை ஏற்க முடியாது என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம், அரச்சலூரில் உள்ள இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாமில், தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலன் அமைச்சர் கே.எஸ்.செஞ்சி மஸ்தான் இன்று (ஜூலை 6) ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், ''தமிழ்நாடு அரசு பொறுப்பேற்றபோது தெரிவித்தபடி, தமிழ்நாட்டில் முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு 3 மாதங்களில் 3500 வீடுகள் கட்டி முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக, திண்டுக்கல்லில் 400 வீடுகள் பயனாளிகளுக்கு வீடுகள் கட்டப்பட்டதாகவும், இரண்டாம் கட்டமாக நடப்பாண்டில் 3,500 வீடுகளுக்கு 222 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு முழுவதும் 106 முகாம்களில் வசிக்கும் மக்களின் கருத்தைக் கேட்டு சாலை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும். இந்த ஆண்டு 300 மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு இணை மானியத்துடன் கடன் வழங்கப்படும். இதனிடையே, முகாம்களில் இருப்பவர்கள் இலங்கைக்குச் சென்ற பின்னர் மீண்டும் தமிழ்நாடு வருவதற்கு சட்டத்தில் இடமில்லை'' என்று திட்டவட்டமாக கூறினார்.
மேலும் பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், 'மாமன்னன்' (Maamannan) திரைப்படம் சமுதாய சீர்திருத்தத்திற்காக எடுக்கப்பட்ட படம் என்றும், ஆண்டான் அடிமை இருக்கக்கூடாது; எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற 'திராவிட மாடல்' கொள்கையின் கருத்து இளைஞர்கள் மத்தியில் பரவ வேண்டும் என்பதற்காகவே இப்படம் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.