ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் படைத் தளபதியாக இருந்த பொல்லானுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என அருந்ததியர் அமைப்பினர் அரசை வலியுறுத்தி வந்த நிலையில், பொல்லானுக்கு மணிமண்டபத்துடன் கூடிய அரங்கம் அமைக்க ஒரு கோடியே 82 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று (அக்.23) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, முத்துசாமி, சாமிநாதன் மற்றும் தமிழ் புலிகள் கட்சி, ஆதித் தமிழர் பேரவை உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் பங்கேற்று, தங்களது கோரிக்கைகள் மற்றும் கருத்துக்களைத் தெரிவித்தனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, “தீரன் சின்னமலையின் படைத் தளபதியாகச் செயல்பட்டது உள்ளிட்ட பல்வேறு வீர வரலாற்றை உள்ளடக்கிய அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த பொல்லானுக்கு, அரசு சார்பில் மரியாதை செலுத்தும் வகையில் மணிமண்டபம் கட்ட கடந்த 2021-ஆம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது.
அந்த மணிமண்டபத்தை நல்லமங்காபாளையம் பகுதியில் அமைக்கத் திட்டமிட்டிருந்த நிலையில், அந்த இடம் போக்குவரத்து உள்ளிட்ட காரணங்களுக்கு போதுமானதாக இல்லை. எனவே, 41 சென்ட் நிலம் ஒதுக்கீடு செய்து ரூ.1.82 கோடி மதிப்பீட்டில் மணிமண்டபம் கட்ட திட்டமிட்ட நிலையில், முதலமைச்சர் உத்தரவின் பேரில் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களும் பயன்படுத்தும் வகையில், அரங்கத்துடன் கூடிய மணிமண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனால், 41 சென்ட் நிலத்தை விடக் கூடுதலாக பொதுப்பணித்துறை சார்பில் 75 சென்ட் நிலம் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தற்போது மணிமண்டபம் அமைய உள்ள ஜெயராமபுரத்தில் கூடுதல் நிலத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெறுகிறது. அது முடிவடைந்த பிறகு, அரங்கத்துடன் கூடிய மணிமண்டபம் கட்டும் பணிகள் நடைபெறும்.