Erode East ByPoll:ஈரோடு இடைத்தேர்தலில் கிடைக்கப்போகும் வெற்றி; நாடாளுமன்றத் தேர்தலுக்கு அச்சாரம் - அமைச்சர் பேச்சு ஈரோடு:ஈரோடு கிழக்குத் தொகுதியில்(Erode East ByPoll)ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், 90 சதவீதம் பேர் மதச்சார்பற்ற கூட்டணிக்கு வாக்கு செலுத்தும் மனநிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
நடக்க உள்ள ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தலையொட்டி, மதச்சார்பற்ற கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று (பிப்.3) தனது கூட்டணி கட்சியின் ஆதரவாளர்களோடு தேர்தல் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். இதனையடுத்து, திமுக தலைமையிலான விசிக, கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சியினர் காங்கிரஸ் வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் இறங்கியுள்ளனர்.
இதனால், ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் தேர்தல் பிரசாரங்களும் வாக்கு சேகரிப்பும் என அங்கு தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இதன் ஒருபகுதியாக, காங்கிரஸின் வேட்பாளரை ஆதரித்து கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று ஜானகி அம்மா வீதியில் வாக்கு சேகரிப்பில் இறங்கினார். அப்போது, அங்குள்ள தாருல் உலூம் சித்தீகிய்யா மத்ரஸா மஜித் பள்ளி வாசலில் தொழுகையை முடித்து வெளியே வந்த ஏராளமான இஸ்லாமியர்களிடம் அமைச்சர் மதச்சார்பற்ற கூட்டணியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு காங்கிரஸ் சின்னமான 'கை' சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஈரோடு கிழக்குத் தொகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டதில் 90 சதவீதம் பேர் மதச்சார்பற்ற கூட்டணிக்கு வாக்களிக்கும் மனநிலையில் இருப்பதாகவும், இந்த இடைத்தேர்தல் வெற்றி என்பது மாபெரும் வெற்றியாகவும் இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும், தங்கள் திமுக அரசின் சாதனைகளை கூறும் வெற்றியாகவும் இருக்கும் எனவும், இந்த இடைத்தேர்தல் வெற்றி என்பது நாடாளுமன்றத் தேர்தலுக்கு அச்சாரமாக இருக்கும் எனவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: Erode East by Election 2023:வேட்புமனு தாக்கல் செய்த ஈவிகேஎஸ் இளங்கோவன்