ஈரோடு: 'புதிய பாரத எழுத்தறிவு' திட்டத்தில், பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் சார்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி தன்னார்வலர்களுக்கான பயிற்சி முகாமினை இன்று (டிச.16) தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத படிக்கத் தெரியாத 4.8 லட்சம் நபர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்க ரூ.9.83 கோடி மதிப்பீட்டில், புதிய எழுத்தறிவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் அனைவரும் கல்வி பெற்ற மாநிலமாக தமிழ்நாடு உருவாகும்.
மாணவர்களுக்கு விளையாட்டும் அவசியம்: பள்ளிகளில் விளையாட்டு நேரத்தில் மற்ற பாடங்கள் நடத்தக் கூடாது என அறிவுறுத்தியுள்ளோம். மாணவர்கள் தங்களை புத்துணர்வு செய்து கொள்வதற்கான ஒரு நேரமாகவும் இது இருக்கும். எனவே, விளையாட்டு வகுப்புகளில் விளையாட்டுகளை மட்டுமே மாணவர்களை ஈடுபடுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம்.
மு.க.ஸ்டாலின் முடிவு எடுப்பார்:'மாநில கல்வி கொள்கை' தொடர்பான குழு, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணத்தை முடித்துள்ளனர். தற்போது, துறை சார்ந்த கருத்துக்களை கேட்டு வருகின்றனர். இந்த டிசம்பர் மாத இறுதிக்குள் கருத்துக்கேட்பு முடித்து, வரும் ஜனவரி மாதத்தில் அறிக்கையை முதலமைச்சரிடம் வழங்குவார்கள்; அந்த அறிக்கையின் அடிப்படையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முடிவு எடுப்பார்.
போதை பொருள்கள் இல்லா தமிழ்நாடு:பள்ளிகளில் போதைப் பொருள்கள் பயன்பாடு தொடர்பாக கடந்த 10 ஆண்டுகளாக கவனிக்காமல் விட்டுவிட்டனர். தற்போது, மாணவர்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.