ஈரோடு மேட்டூர் சாலை கடந்த நான்கு மாதங்களுக்கு முன் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டது. பெருந்துறை சாலை, கேவிஎன் சாலை வழியாக வரும் வாகனங்கள் மட்டுமே மேட்டூர் சாலையில் செல்ல அனுமதிக்கப்பட்டு வந்தது.
அதேபோல் சத்தி சாலையில் இருந்து வரும் வாகனங்கள் நாச்சியப்பா வீதி வழியாக திருப்பி விடப்பட்டன. இதனால் அப்பகுதியில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
குறிப்பாக காலை, மாலை நேரங்களில் ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து சவிதா சாலை வரை நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் சூழல் உருவாகியுள்ளது.
இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய போக்குவரத்து காவல்துறையினர் நியமிக்கப்பட்டப்போதிலும், நாச்சியப்பா வீதி நான்கு சாலை சந்திப்பில் நெரிசல் குறைந்தபாடில்லை.
இந்நிலையில் போக்குவரத்து நெரிசல் தொடர்பாக எஸ்பியிடம் நாச்சியப்பா வீதி வியாபாரிகள், பொதுமக்கள் மனு அளித்தனர்.
இதுதொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இன்று (அக்.16) அப்பகுதியில் உள்ள 150க்கும் மேற்பட்ட கடைகளில் கருப்பு கொடிகளை கட்டி வியாபாரிகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
மாவட்ட நிர்வாகம் இனியும் தாமதிக்காமல் நாச்சியப்பா வீதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.