ஈரோடு:கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொளப்பலூரைச் சேர்ந்தவர் துரைராஜ். 75 வயதான இவர் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அதே பகுதியில் கிளினிக் வைத்து நடத்தி வருகிறார். 10ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள துரைராஜ், ஆயுர்வேத சிகிச்சை அளிப்பதாக கூறிக்கொண்டு பல ஆண்டுகளாக ஆங்கில முறைப்படி சிகிச்சை அளித்து வந்துள்ளார்.
இந்நிலையில் துரைராஜ், மருத்துவ படிப்பு படிக்காத நிலையில், ஆங்கில மருத்துவ முறைப்படி சிகிச்சை அளித்து வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் வந்தது. அதைத்தொடர்ந்து அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் அப்புராஜ், அயலூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் தலைமையில் சுகாதாரத்துறை மற்றும் காவல் துறையினர் துரைராஜ் கிளினிக்கில் திடீர் சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனையில் காலி மருந்து குப்பிகள், பயன்படுத்தப்பட்ட ஊசி, ரத்த அழுத்தம் பார்க்கும் கருவி மட்டுமே கிடைத்துள்ள நிலையில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். துரைராஜ் மீது கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் போலி மருத்துவர் என புகார் எழுந்ததை தொடர்ந்து, அப்போது கைது செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து தற்போது மீண்டும் புகார் வந்ததை அடுத்து சோதனை நடைபெற்றது.