தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன்னறிவிப்பின்றி தொழிற்சாலையை மூடிய அதிகாரிகள்.. ஈரோடு சிப்காட் தொழிலாளர்கள் கொந்தளிப்பு! - Erode District

SIPCOT: சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் செயல்பட்டு வரும் தொழிற்சாலையை, எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி மூடியதால் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, தொழிற்சாலை நிர்வாகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொழிற்சாலை நிர்வாகத்தினர் போராட்டம்
முன் அறிவிப்பின்றி தொழிற்சாலையை மூடிய அதிகாரிகள்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 23, 2023, 4:23 PM IST

முன் அறிவிப்பின்றி தொழிற்சாலையை மூடிய அதிகாரிகள்

ஈரோடு:ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள ஈங்கூர், பாலத்தொழுவு, கம்பிலியம் பட்டி, கடப்பமடை, எழுதிங்கள் பட்டி, காசிப்பில்லாம் பாளையம், பெரிய வேட்டுவபாளையம், சின்ன வேட்டுவபாளையம் என 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, சிப்காட் தொழிற்பேட்டை வளாகமாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிப்காட் தொழில்பேட்டை வளாகத்தில் கண்ணாடி தொழிற்சாலை, தோல் தொழிற்சாலை, இரும்பு உருக்கு அலை, பீங்கான் தொழிற்சாலை, சாய தோல் தொழிற்சாலைகள் என 200க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், முறையாக சுத்தீகரிப்பு செய்யப்படாமல் வெளியேற்றப்படுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதுடன், புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தொற்றுகளுக்கு ஆளாவதாகவும் பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், பொதுமக்களின் தொடர் கண்காணிப்பு மற்றும் போராட்டத்தின் காரணமாக ஐந்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இந்நிலையில், இன்று திடீரென முன் அறிவிப்புகள் ஏதுமின்றி தொழிலாளர்களைக் கொண்டு இயங்கி வந்த தொழிற்சாலையை, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மூடியுள்ளதாகத் தெரிகிறது. இதனால் தொழிற்சாலை நிர்வாகத்தினர் அங்கு பணியாற்றும் தொழிலாளர்களுடன் இணைந்து, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: உங்கள் கருத்துக்கான பதிலை பிரதமரிடம் கேட்டுப்பெறுங்கள் - மத்திய நிதியமைச்சருக்கு எம்பி சு.வெங்கடேசன் பதில்!

இதனையடுத்து, இது குறித்த தகவல் அறிந்ததும் சிப்காட் வளாகத்தில் சாயக் கழிவுநீர் பிரச்னை தொடர்பாக போராடி வரும் அப்பகுதியைச் சேர்ந்த மக்களில் சிலர், மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்திற்கு வந்ததால் தொழிற்சாலை நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தொழிற்சாலை நிர்வாகத்தினர், “உலகளவில் புகழ்பெற்ற தொழிற்சாலைகள் பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் இயங்கி வருகிறது. இங்கு பூஜ்ஜியம் முறை சுத்திகரிப்பு செய்யப்பட்டு வருகிறது. தவறு செய்யும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுப்பதை, தாங்கள் ஒருபோதும் ஆட்சேபனை தெரிவிப்பது இல்லை. ஆனால், முன் அறிவிப்பு ஆணை வழங்கி, தவறு நிரூபிக்கும் பட்சத்தில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஆனால், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் எந்த விதமான முன்னறிவிப்பும் இன்றி தொழிற்சாலையின் மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பை துண்டிப்பதால், தொழிற்சாலை நிர்வாகத்தினர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மேலும், இதனால் தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் தங்கியுள்ள இடத்திற்கு மின்சாரம் மற்றும் குடிநீர் உள்ளிட்டவை கிடைக்காமல் பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர்” என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளின் இது போன்ற நடவடிக்கைகளால் பெருந்துறை சிப்காட் பகுதியில் தொழில் தொடங்க தொழில் நிறுவனத்தினர் அச்சப்படுவதாக புகார் தெரிவித்தனர். இந்நிலையில், தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து தொழிற்சாலை நிர்வாகத்தினருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என தொழிற்சாலை நிர்வாகத்தினர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையும் படிங்க: மாற்றுத்திறனாளிகளின் சலுகை குறித்து அரசு ஊழியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் - கேப்டன் சச்சின் சிவா..

ABOUT THE AUTHOR

...view details