ஈரோடு:கருங்கவுண்டன் வலசு, பெருமாள் மலை பகுதியிலுள்ள சேனாங்காட்டு தோட்டத்தைச் சேர்ந்த விவசாயி கருப்பண கவுண்டர் (75), இவரது மனைவி மல்லிகா (55), இத்தம்பதியின் மகள் தீபா (30). பிரபு என்பவரைத் திருமணம் செய்துகொண்ட தீபா, தந்தை வீட்டில் வசித்துவந்தார்.
இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தீபாவின் கணவர் நேற்று முன்தினம் (ஜூன் 26) சென்னிமலைக்குச் சென்றுவிட்டார். வீட்டில் கருப்பண கவுண்டர், அவரது மனைவி, தீபா, இவர்களது தோட்டத்தில் வேலை செய்துவந்த குப்பம்மாள் (65), கல்யாணசுந்தரம் (43) ஆகியோர் இருந்துள்ளனர்.
எமனாக வந்த கரோனா பரிசோதனை
அப்போது, கரோனா பரிசோதனை செய்வதாகக் கூறி கருப்பண கவுண்டர் வீட்டிற்கு வந்த நபர், கரோனா பரிசோதனைக்கு சற்றும் தொடர்பில்லாத கறுப்பு நிற மாத்திரையை கொடுத்தார். இதைக் குறித்து அறியாமல் அவர்களும் அதை உட்கொண்டுள்ளனர். கல்யாணசுந்தரம் மட்டும் அந்த மாத்திரையை வேண்டாம் என மறுத்துள்ளார்.
பின்னர், அந்த நபர் நால்வரிடமிருந்தும் கரோனா பரிசோதனை செய்வதற்கான மாதிரிகளை எடுத்துவிட்டு, அங்கிருந்து புறப்பட்டார். அவரை தனது இருசக்கர வாகனத்தில் பிரதான சாலை வரை அழைத்துச் சென்றுள்ளார் கல்யாணசுந்தரம்.
இதனிடையே, மாத்திரை உட்கொண்ட சுமார் அரை மணி நேரத்தில் நால்வருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதி
மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே மல்லிகா உயிரிழந்தார். கருப்பண கவுண்டரும், அவரது மகள் தீபாவும் கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். குப்பம்மாள் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
காவல் துறை விசாரணை
தகவலறிந்த ஈரோடு காவல் கண்காணிப்பாளர் சசிமோகன், காவல் துணைக் கண்காணிப்பாளர் செல்வராஜ், சென்னிமலை காவல் ஆய்வாளர் சரவணன் சம்பவ இடத்திற்குச் சென்று கடந்த 26ஆம் தேதி ஆய்வுசெய்தனர். அப்போது, கருப்பண கவுண்டர் வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்திலிருந்த கல்யாணசுந்தரத்திடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
அப்போது, கருப்பண கவுண்டர் குடும்பத்தினருக்கு நெருக்கமான நபராகத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட கல்யாணசுந்தரம், ஏற்கனவே கரோனா பரிசோதனை செய்த காரணத்தால்தான் அன்று பரிசோதனை செய்துகொள்ளவில்லை எனக் கூறியுள்ளார்.
தனிப்படை விசாரணை
தொடர்ந்து, கல்யாணசுந்தரத்திடம் காவல் துறையினர் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. ஆரம்பக்கட்ட விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளார். சந்தேகமடைந்த காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தியதில், கல்யாணசுந்தரம் கருப்பண கவுண்டரிடம் கடன் வாங்கியதும், அதைத் திருப்பிக் கேட்டு அழுத்தம் கொடுத்ததும் தெரியவந்தது.
தலைக்கு மேல் வெள்ளம்போன கதை
ஆப்பக்கூடல் அருகே கீழ்வாணி பகுதியைச் சேர்ந்த கல்யாணசுந்தரம், சென்னிமலை அருகே அம்மாபாளையத்தில் வாடகை வீட்டில் தன் குடும்பத்துடன் வசித்துவருகிறார். பால் வியாபாரம் செய்துவந்த கல்யாணசுந்தரம், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கருப்பண கவுண்டருடன் சேர்ந்து தோட்ட வேலையில் ஈடுபட்டுவந்துள்ளார்.
அப்போது கருப்பண கவுண்டரிடம் ரூபாய் 10 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அது நாளடைவில் வட்டியுடன் 15 லட்ச ரூபாயை எட்டியுள்ளது. இதனால் கருப்பண கவுண்டருக்கும், கல்யாணசுந்தரத்திற்கும் இடையில் பிணக்கு ஏற்பட்டுள்ளது. இந்தக் கடனை திருப்பி கொடுக்கும் வழியும் கல்யாணசுந்தரத்திற்குத் தெரியவில்லை.
சம்பவத்தன்று (ஜூன்.26) கல்யாணசுந்தரம் பேசிய காணொலி விவசாயி குடும்பத்திற்கு கல்லூரி மாணவர் மூலம் ஸ்கெச்
வாங்கிய கடனைத் திரும்ப கொடுப்பதற்கு மனமில்லாத கல்யாணசுந்தரம், தான் பால் வியாபாரம் செய்யும்போது பழக்கமான நபரை தன் கொலை திட்டத்திற்காகப் பயன்படுத்த முடிவுசெய்துள்ளார். அதன்படி, தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் போத்தீஸ்குமாருக்கு (19), கரோனா பரிசோதனை செய்யும் வேலை வாங்கித் தருவதாக ஆசைகாட்டி, தன் காரியத்திற்குப் பயன்படுத்தியுள்ளார்.
அவரது குடும்பத்தாரிடமும் இதே வாக்குறுதியை அளித்ததோடு, இதற்காக போத்தீஸ்குமாரை தன்னுடன் அனுப்பிவைக்க வேண்டும் என்றும் கல்யாணசுந்தரம் தெரிவித்துள்ளார். இதற்கு அவர்கள் உடன்படவே, போத்தீஸ்குமாருக்கு தன் திட்டத்தின் ஒருபகுதியை விளக்கி, பூச்சிக்கொல்லி மாத்திரையுடன் கருப்பண கவுண்டர் வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்!
கடனைத் திருப்பி கொடுக்க மனமில்லாமல், விவசாயி குடும்பத்தை திட்டமிட்டு கொலை செய்த கல்யாணசுந்தரம், அவருக்கு உடந்தையாக இருந்த கல்லூரி மாணவர் போத்தீஸ்குமார் ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைதுசெய்தனர். இந்தச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம், மீதமுள்ள மாத்திரைகள் பறிமுதல்செய்யப்பட்டன.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த குப்பம்மாளும், தீபாவும் நேற்று (ஜூன் 27) உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பெண்ணை கொலை செய்து கரோனா மீது பழியை போட்ட எஸ்.ஐ