தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போலி செய்தியாளர் அடையாள அட்டையைப் பயன்படுத்தி மோசடி: ஒருவர் கைது! - ஈரோடு செய்திகள்

ஈரோடு: தனியார் தொலைக்காட்சியின் பெயரில் போலியாக அடையாள அட்டையைத் தயாரித்து பெருந்துறையில் மோசடியில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

போலி செய்தியாளர் அடையாள அட்டையை பயன்படுத்தி மோசடி: ஒருவர் கைது!
போலி செய்தியாளர் அடையாள அட்டையை பயன்படுத்தி மோசடி: ஒருவர் கைது!

By

Published : May 9, 2020, 12:11 AM IST

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பேரூராட்சிக்கு உட்பட்ட மேக்கூர் பகுதியில் உள்ள செங்குந்தர் திருமண மண்டபத்தில் நிவாரண உதவி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினர் தோப்பு வெங்கடாசலம் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிக்கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த நபர் ஒருவர், தன்னை தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளர் எனக் கூறி, ஏன் இந்த நிகழ்ச்சியில் தகுந்த இடைவெளி கடைப்பிடிக்கவில்லை என அங்குள்ளவர்களை மிரட்டியுள்ளார். அப்போது அங்கிருந்த மற்றொரு தொலைக்காட்சியின் செய்தியாளர் அந்த நபரிடம் அடையாள அட்டையை வாங்கி பார்த்தபோது, அது போலியானது என தெரியவந்தது.

மேலும் அந்த நபர் செய்தியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு கொலை மிரட்டலும் விடுத்தார். இதனையடுத்து அங்கிருந்த செய்தியாளர்கள் அளித்த புகாரின் பேரில், அங்குப் பணியிலிருந்த உதவி ஆய்வாளர் செந்தில் குமார் அந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டார்.

விசாரணையில், அவர் பெயர் சுபின்(28) என்பதும் பெருந்துறையில் சொந்தமாக ஸ்டுடியோ வைத்து நடத்தி வருவதும் தெரியவந்தது. பிரபல தொலைக்காட்சி லோகோவை வைத்து போலி அடையாள அட்டை தயாரித்து பலரையும் மிரட்டியுள்ளதும் தெரியவந்தது. இதனையடுத்து சுபின் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்த காவல்துறையினர், அவரை ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க...'இரண்டு மாசம் சம்பளம் கொடுத்தோம்... இப்போ முடியல' - கைவிரித்த இண்டிகோ

ABOUT THE AUTHOR

...view details