ஈரோடு:ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் பிரபல கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டுமான நிறுவனத்துக்கு சொந்தமான குடோனில், பழைய இரும்பு பொருட்கள், உடைந்த இரும்புகள், இரும்பு பெயிண்ட் ட்ரம்கள் ஆகியற்றை வைத்து அதனை பழைய இரும்பு வியாபாரிகளிடம் மொத்தமாக விற்பனை செய்து வந்துள்ளனர்.
குடோனில் உள்ள இரும்பு பொருள்களை, ஈரோடு அக்ரகாரம் பகுதியைச் சேர்ந்த, பழைய இரும்பு வியாபாரி அலாவுதீன் பாஷா என்பவர் கொள்முதல் செய்து வந்துள்ளார். இந்நிலையில், குடோனில் உள்ள இரும்பு பொருள்கள் காணாமல் போனதை தொடர்ந்து, நிறுவனத்தின் சார்பில் ஈரோடு வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட வடக்கு காவல் துறையினர், அங்குள்ள சிசிடிவி காட்சி பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், குடோனில் உள்ள இரும்பு பொருள்களை கொள்முதல் செய்து வந்த அலாவுதீன் பாஷா, கட்டுமான நிறுவனத்தின் காவலாளர் ராஜேஷ் மற்றும் நண்பர்கள் உதவியுடன் குடோனில் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான 5 டன் இரும்பு உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, குடோனில் இருந்து இரும்பு பொருள்களை கொள்ளையடித்துச் சென்ற அலாவுதீன் பாஷா, அகமது பாஷா, சிராஜுதீன் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், கட்டுமான நிறுவனத்தில் இருந்து பழைய இரும்பு பொருட்களை திருடிச் சென்ற சம்பவத்தில் உடந்தையாக இருந்தவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:கோடநாடு கொலை கொள்ளை வழக்கு; முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் மகன் விசாரணைக்கு ஆஜர்!