1000க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டம் ஈரோடு:விவசாயிகளின் கருத்தை கேட்டு தான் பணிகளை தொடங்க வேண்டும், கீழ்பவானி பாசன கால்வாயை பாதுகாக்க சட்ட ரீதியான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கீழ்பவானி பகுதி விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
கீழ்பவானி கால்வாய் பகுதியில் கான்கிரீட் திட்டம் அமைக்கும் கட்டுமான நிறுவனமும், பொதுப்பணித் துறையும் விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை மீறி, தற்போது கூடுதலாக 11 இடங்களில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும். இதனால் ஆகஸ்ட் 15ஆம் தேதி தண்ணீர் திறப்பு என்பது கேள்விக்குறியாகி உள்ளதாகவும் விவசாயிகள் கருதுகின்றனர்.
இந்நிலையில் கீழ்பவானி கால்வாயின் தண்ணீர் திறப்பு குறித்து அமைச்சர் மற்றும் அரசு அதிகாரிகள் அளித்த உறுதியின் படி ஆகஸ்ட் 15ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட வேண்டிய தேதிக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், கீழ்பவானி பாசன பாதுகாப்பு அமைப்பின் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள், நீர்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க:முதலமைச்சரின் 'போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு' உறுதிமொழி ஏற்பு நிகழ்வு:13,000 கிலோ கஞ்சா அழிப்பு
போராட்டத்தில் தமிழக அரசு தண்ணீர் திறப்பிற்கான அரசாணையை வெளியிட வேண்டும் என்றும், கான்கிரீட் திட்டம் தொடர்பான அரசாணை எண் 276 ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கையை அப்பகுதி விவசாயிகள் முன்வைத்து உள்ளனர். மேலும் இந்த போராட்டத்தின் காரணமாக பாதுகாப்பு கருதி 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து கீழ்பவானி பாசன பாதுகாப்பு அமைப்பு விவசாயிகள் சார்பில், கீழ்பவானி நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளரை சந்தித்து, ஆகஸ்ட் 15ஆம் தேதி தண்ணீர் திறப்பு குறித்து மனு அளித்தனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தினர், அரசு அறிவித்தபடி ஆகஸ்ட் 15ஆம் தேதி தண்ணீர் திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அவ்வாறு தண்ணீர் திறக்கவில்லை என்றால் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை கருப்பு தினமாக அனுசரிப்பதாகவும், கீழ்பவானி பாசன கால்வாயில் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் இடங்களில் விவசாயிகள் தங்கள் கால்நடைகளுடனும், பொது மக்கள் காலி குடங்களுடனும் சென்று போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:ஆண்கள் மட்டும் பங்கேற்கும் இரவு திருவிழா: 60 ஆடுகளை நேர்த்திக்கடனாக செலுத்திய பக்தர்!