ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி சாகர் அணையிலிருந்து தொடங்கும், கீழ்பவானி வாய்க்காலில் பல இடங்களில் பிரதான கால்வாய், மதகுகள், பாலங்கள் ஆகியவை பழுதடைந்தும், சிதிலமடைந்தும் உள்ளதால் இவைகளை புதுப்பித்தல், நவீனப்படுத்துதல் மற்றும் விரிவாக்கம் போன்ற பணிகளை செய்ய, அரசு 709 கோடியே 60 லட்சம் ரூபாயை ஒதுக்கியது.
இந்த திட்டத்தை நிறைவேற்றினால் நீர் செறிவூட்டுதல் நின்று குடிநீர் பஞ்சம் ஏற்படும் எனக்கூறி, ஒரு தரப்பு விவசாயிகள் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.
ஆனால், இது முழுமையான கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டம் அல்ல என்றும், நீர் செறிவூட்டுதல் எந்த வகையிலும் பாதிக்காத வகையில் சிதிலமடைந்த பிரதான கால்வாய், பழுதடைந்த பாலங்கள், மதகுகளை பராமரிப்பு செய்து கடைக்கோடி பகுதி விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்க செய்யும் திட்டம் என பொதுப் பணி துறையினர் விளக்கம் அளித்து வந்தனர்.
கடந்த 21ஆம் தேதி சென்னிமலை அருகே தலவுமலை என்ற இடத்தில் பொதுப்பணி துறைக்கு சொந்தமான இடத்தில் சிமெண்ட் பலகைகள் தயாரிப்பதற்கான பணிகள் தொடங்கியன. அப்போது, இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகள் அங்கு சென்று வாக்கு எண்ணிக்கை முடிந்து புதிய அரசு பொறுப்பேற்கும் வரை எந்த பணிகளையும் செய்யக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.
பின்னர் ஈரோடு ஆர்.டி.ஓ தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் வருகிற 5ஆம் தேதிவரை வாய்க்கால் பகுதியில் பணிகளை செய்வதில்லை என முடிவு செய்யப்பட்டது. அதே சமயம் கான்கிரீட் திட்டத்தை ரத்து செய்யக்கோரி மு. ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கைத் தொடுத்துள்ளார்.
இந்த வழக்கை எதிர்கொள்ளும் வகையில், கீழ்பவானி வாய்க்காலில் பராமரிப்பு பணியை விரைவில் தொடங்கக் கோரி, கீழ்பவானி ஆயக்கட்டு பாசன விவசாயிகள் நலச்சங்கம் என்ற பெயரில் ஒரு அமைப்பை எஸ்.பெரியசாமி, கி.வே.பொன்னையன், சுப்பு என்கிற முத்துசாமி ஆகியோர் ஒருங்கிணைப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.