ஈரோடு: தமிழ்நாடு அரசின் சார்பில் 1983ஆம் ஆண்டு முதல் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது. அதன்படி தற்போது 2 கோடி அளவிளான வேட்டி, சேலைகள் உற்பத்தி செய்யப்படுகின்றது. இதற்காக இந்த ஆண்டு 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது.
இந்த திட்டத்திறக்கான பணிகள் தமிழ்நாட்டில் உள்ள ஈரோடு, திருப்பூர், கோவை, திருச்செங்கோடு பள்ளிப்பாளையம் மற்றும் விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விசைத்தறி கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. உற்பத்தி செய்யபடும் நெசவாளர்களுக்கான நூலை அரசே வழங்கும்.
இந்தப் பணியானது ஆண்டுதோறும் ஜுலை மாதம் தொடங்கப்பட்டு, டிசம்பர் மாதம் நிறைவடைந்து பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு முன்னதாகவே வழங்கப்பட்டு வந்தன. ஆனால், கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு இதற்கான பணிகளை தொடங்கியதே தாமதமானது மட்டுமல்லாமல், தரமற்ற நூல்களையும் அரசு வழங்கியதாகவும், இதனால் தாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது மட்டுமின்றி, சரியான நேரத்திற்கு பணிகளை முடிக்க முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகியதாகவும் விசைத்தறி உரிமையாளர் தெரிவித்தனர்.
இதனையடுத்து, விசைத்தறி உரிமையாளர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டதால், இந்த ஆண்டு இலவச வேஷ்டி, சேலைக்கான பணிகள் முன்னதாகவே தொடங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. ஆனால், தற்போது வரை இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், இன்னும் நூல்களைக் கூட தராமல் தமிழ்நாடு அரசு இருந்து வருகிறது என விசைத்தறி உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.