சுமை தூக்கும் பணியாளர்கள் போராட்டம் ஈரோடு: ஈரோடு மாவட்டம் பார்க் ரோடு, மூலப்பட்டறை, சக்தி ரோடு போன்ற பகுதியில் சுமார் 150க்கும் மேற்பட்ட லாரி அலுவலர்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த லாரி அலுவலகம் மூலமாக வெளி மாநிலங்களுக்கு ஜவுளி, மஞ்சள் போன்ற அத்தியாவசிய பொருள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
இதில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சுமை தூக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு இது நாள் வரை டன் ஒன்றுக்கு ரூபாய் 120 வரை கூலி வழங்கபட்டன. இந்த நிலையில் கடந்த ஆறு ஆண்டுகளாகக் கூலி உயர்வு வழங்காத காரணத்தாலும் வேண்டுமென்றே இழுத்தடிக்கும் காரணத்தினால் டிரான்ஸ்போர்ட் மற்றும் ரெகுலர் லாரி நிறுவனங்களைக் கண்டித்தும் அவர்களின் மீது நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தியும் ஈரோடு ஸ்டார் தியேட்டர் சாலையில் 5000 க்கும் மேற்பட்ட ஈரோடு மாவட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் மூன்றாவது நாளாகக் கால வரையற்ற வேலை நிறுத்தப்பட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஈரோடு மத்திய சுமை தூக்கும் சங்கத்தின் பொதுச்செயலாளரும், அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ் தென்னரசு மற்றும் ஈரோடு மாவட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவரும் அதிமுக பகுதி கழக செயலாளருமான மனோகரன் ஆகியோரது தலைமையில் இந்த வேலை நிறுத்தப் போராட்டமானது தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.இந்த போராட்டத்தின் காரணமாக ஈரோடு மாவட்டத்திலிருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்குச் செல்லக்கூடிய ஜவுளி, மஞ்சள் உள்ளிட்ட 250 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தேக்கம் அடைந்து உள்ளன.
இதே போல் "75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வட மாநிலங்களுக்குச் செல்லும் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலிருந்து தேங்காய், ஜவ்வரிசி, மருந்து தயாரிக்கும் பொருட்கள், தீப்பெட்டி பட்டாசு, ஜவுளி உள்ளிட்ட பொருட்கள் அனுப்ப முடியாமல் தேக்கமடைந்துள்ளது.மேலும், வட மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரக்கூடிய ஆப்பிள், மருந்து தயாரிக்கும் பொருட்கள், இயந்திரங்கள், ஜவுளி உள்ளிட்டவையும் ஆங்காங்கே தேக்கமடைந்துள்ளது. இதனால் பல நூறு கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. பொருட்கள் தேக்கம் அடைந்து உள்ளதால் ஆயிரக்கணக்கான லாரி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்" என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:வட மாநிலங்களில் கனமழை எதிரொலி:தமிழ்நாட்டில் 75 ஆயிரம் லாரிகள் நிறுத்தம்!