ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி வனப்பகுதியை ஒட்டியுள்ள தொட்டகாஜனூர், பீம்ராஜ்நகர், சூசைபுரம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயம் மற்றும் கால்நடைகளை வளர்ப்பதை அக்கிராம மக்கள் முக்கிய தொழிலாகச் செய்து வருகின்றனர்.
இதற்கிடையில் சில மாதங்களுக்கு முன்பு வனப்பகுதியிலிருந்து வெளியே வந்த சிறுத்தை ஒன்று அப்பகுதியில் உள்ள கல்குவாரில் பதுங்கி கிராமங்களில் உள்ள கால்நடைகளைத் தொடர்ந்து வேட்டையாடி வந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தொட்டகாஜனூர் கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் என்பவரின் ஆட்டை சிறுத்தை கடித்துக் கொன்றது.
இதனால் சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்காணிக்க விவசாய தோட்டத்தில் 2 கேமராக்கள் பொருத்தினர். இதில் சிறுத்தை நடமாட்டம் பதிவானது. இதனைத் தொடர்ந்து கிராமப் பகுதியில் சிறுத்தை உலா வருவதை வனத்துறையினர் உறுதி செய்தனர்.
பின்னர் சிறுத்தையைப் பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக வனத்துறையினர் குணசேகரன் விவசாய தோட்டத்தில் கூண்டு வைத்துள்ளனர். சிறுத்தை இன்னும் வனத்துறையினரிடம் பிடிபடாத நிலையில், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க:"நாய் கறி சாப்பிடும் நாகா மக்கள்" - திமுகவின் ஆர்.எஸ்.பாரதி பேச்சுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டனம்!