ஈரோடு சத்தியமங்கலத்தை அடுத்துள்ள வனப்பகுதியில் அமைந்துள்ளது பண்ணாரி அம்மன் கோயில். இக்கோயிலில் பங்குனி மாதம் நடைபெறும் தீமிதித் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபடுவது வழக்கம்.
திருவிழாக்காலத்தில் கோயிலில் வாகனங்கள் நிறுத்தவும் பக்தர்கள் தங்குவதற்கும் இடப்பற்றாக்குறை இருப்பதாகத் தெரிகிறது. இதைக் களைய கோயிலை ஒட்டியுள்ள வனத்துறைக்குச் சொந்தமான 25 ஏக்கர் நிலத்தை வழங்கவேண்டும் என இந்துசமய அறநிலையத்துறை சார்பில் தமிழ்நாடு அரசுக்கு மனு அனுப்பப்பட்டது.
வனத்துறையில் ஒரு ஏக்கர் நிலம் எடுத்தால் வனத்துறைக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கவேண்டும் என்ற விதிமுறை உள்ளதால், கோயிலை ஒட்டி வழங்கப்படவுள்ள 25 ஏக்கர் நிலத்திற்கு பதிலாக தாளவாடிக்குட்பட்ட கோட்டமாளம் மலைக்கிராமத்தில் உள்ள வருவாய்த்துறைக்கு சொந்தமான 50 ஏக்கர் நிலத்தை வனத்துறைக்கு ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.
கோட்டமாளத்தில் வனத்துறைக்கு நிலம் வழங்க அப்பகுதி மலைவாழ் மக்கள் எதிர்ப்பு கடந்த மாதம் வருவாய்த்துறையினர், பண்ணாரிஅம்மன் கோயில் அலுவலர்கள் நிலத்தை அளவீடு செய்வதற்காக கோட்டமாளம் கிராமத்திற்குச் சென்றபோது அப்பகுதி கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து நிலம் அளவீடு செய்யும் பணியை அதிகாரிகள் கைவிட்டனர். இந்நிலையில் சத்தியமங்கலம் வட்டத்திற்குட்பட்ட கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள வருவாய்த்துறைக்குச் சொந்தமான நிலத்தை வனத்துறைக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.