ஈரோடு: ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை ஏற்றார். வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் பங்கேற்று முன்னிலை வகித்தனர். தொடர்ந்து மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை முதன்மை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டனர்.
நடவடிக்கைகள் குறித்து கேள்வி
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைள், அவர்களுக்கு வழங்கப்படும் காய்கறி, பால், தண்ணீர், உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகள் குறித்தும், நடமாடும் காய்கறி வாகனங்கள் குறித்தும் அமைச்சர் கே.என்.நேரு ஆட்சியரிடம் கேட்டறிந்தார்.
அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் கரோனா ஆய்வுக் கூட்டம் மேலும், பொதுமக்களுக்கு மேற்கொள்ளப்படும் கரோனா தொற்று பரிசோதனைகள், அதன் முடிவுகள்; தொற்று உறுதியானவர்களுக்கு அரசு தரப்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
24 மணிநேரத்தில் முடிவு
அதற்குப் பதிலளித்த மாவட்ட ஆட்சித்தலைவர் சி.கதிரவன், "ஈரோடு மாவட்டத்தில் தொற்று அறிகுறி இருப்பவர்களுக்கு எடுக்கப்படும் சளி மாதிரிகளின் பரிசோதனை முடிவுகள் 24 மணி நேரத்தில் வழங்கும் வகையில், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பரிசோதனை முடிவில் தொற்று உறுதி செய்யப்படும் நபர்கள், உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு, சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டும் வருகிறது.
தொடர்ந்து, ஸ்கேன் பரிசோதனையில் தொற்றின் தன்மை அதிகமாக இருந்தால் அவர்கள் மருத்துவமனையிலும், குறைவாக இருந்தால் கரோனா சிகிச்சை மையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது" என்றார்.
முன்னதாக, ஈரோடு மாவட்டம், திண்டல் வேளாளர் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தில், அடிப்படை வசதிகள், சிகிச்சை முறைகள் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, ஈரோடு மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் கனிமார்க்கெட் ஜவுளிச் சந்தையினை ரூ. 51.59 கோடி மதிப்பீட்டில் நவீன மயமாக்க கட்டப்பட்டு வரும் கட்டடப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
கூட்டத்தில் பங்கேற்றவர்கள்
இக்கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.செல்வராஜ், சட்டப்பேரவை உறுப்பினர்கள் திருமகன் ஈவெரா, ஏ.ஜி.வெங்கடாசலம், அரசுத்துறை முதன்மை அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
மேலும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, நகராட்சி நிர்வாக ஆணையர் கே.பாஸ்கரன், ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநர் டாக்டர் இரா.செல்வராஜ், மாவட்ட ஆட்சித்தலைவர் சி.கதிரவன், கனிமம் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் எல்.நிர்மல் ராஜ், ஈரோடு மக்களவை உறுப்பினர் அ.கணேசமூர்த்தி, திருப்பூர் மக்களவை உறுப்பினர் கே.சுப்பராயன் ஆகியோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: லேட்டாகவும் லாஸ்ட்டாகவும் கோவின் தளத்தில் வந்த 'தமிழ்'