ஈரோடு: கொடுமுடி அருகேயுள்ள காவிரியாற்றின் தடுப்பணையில் ஏற்படும் உயிரழப்புகளை தடுத்து நிறுத்திட நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
கொடுமுடி அருகே மலையம்பாளையம், காரணாம்பாளையம் பகுதியில் காவிரியாற்றின் குறுக்கே, கடந்த 1961ஆம் ஆண்டு புகளூர் புதுக்கால்வாய்த் திட்டம் தலைமை மதகு என்கிற பெயரில் தடுப்பணை அமைக்கப்பட்டது.
இந்தத் தடுப்பணை தமிழ்நாடு முழுவதும் பிரசித்தி பெற்று சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்த்திடும் பகுதியாக மாறியது. வெளியூர் சுற்றுலாப் பயணிகள் விடுமுறை நாள்களில் குடும்பத்துடன் வந்திருந்து குளித்து உணவருந்தி மகிழ்ச்சியுடன் செல்வது வாடிக்கையாக உள்ளது.
இதனிடையே காரணாம்பாளையம் தடுப்பணையில் அதிகளவில் உயிருக்கு ஆபத்தான சுழல்கள் அமைந்துள்ளதுடன், அதிக ஆழமான பகுதியாகவும் உள்ளது. வெளியூரிலிருந்து வருபவர்கள் உற்சாக மிகுதியில் சுழல்களிலும், அதிக ஆழமான பகுதிகளில் சிக்கி உயிரிழந்து வருகின்றனர்.
கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னர் கூட திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த வாடகை கார் ஓட்டுநர் ஸ்டீபன் ஆழமான பகுதிக்கு சென்று சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுபோல் மாதம் ஒன்றுக்கு 10க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தாலும் காவல்துறையினர், இந்த உயிரிழப்பை அவர்களது குடும்பத்தினர் மிகவும் நிர்ப்பந்தப்படுத்தினால் மட்டுமே பதிவு செய்வதாகக் கூறப்படுகிறது.