ஈரோடு:சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள், அருகாமையில் உள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிட்டு உள்ள வாழை, கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கடம்பூர் மலைப்பகுதியில் இருந்து ஊருக்குள் புகுந்து தொடர்ச்சியாக விவசாயப் பயிர்களை சேதம் செய்த கட்டையன் யானையை வனத்துறையினர் பிடித்து, பவானிசாகர் வனச்சரகத்தில் உள்ள மங்களப்பட்டி வனப்பகுதியில் விடுவித்தனர்.
தற்போது கட்டையன் யானை பவானிசாகர் அணை நீர் தேக்கத்தை ஒட்டி உள்ள சித்தன் குட்டை, அய்யம்பாளையம், ஜேஜே நகர் உள்ளிட்ட கிராமங்களில் பகல் நேரத்தில் நுழைந்து தொடர்ச்சியாக பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இவ்வாறு ஊருக்குள் நுழையும் காட்டு யானையைப் பிடித்து வேறு பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் என கிராம மக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, வனத்துறையினர் கட்டையன் யானையை பிடிக்க கும்கி யானைகளை பயன்படுத்த திட்டமிட்டனர்.