Erode East bypoll: செங்கோட்டையில் அதிமுக கூட்டணியி வெற்றி எதிரொலிக்கும் - செங்கோட்டையன் பேச்சு ஈரோடுகிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் (Erode East bypoll)வரும் பிப்.27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் களப்பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்நிலையில் அதிமுக சார்பில் வீரப்பன்சத்திரம் பகுதியில் ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் இன்று (ஜன.29) நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தலுக்கான தேர்தல் பணிகள் குழுவில் நியமிக்கப்பட்டவர்கள் பல தேர்தலை கண்டவர்கள் எனவும், அதிமுக வெற்றி இலக்கை அடைவதற்கு அனைத்து தரப்பினரும் பாடுபடுவதாகவும் தெரிவித்தார்.
இந்த தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை அடைய எடப்பாடி பழனிசாமி ஆலோசனை வழங்கியுள்ளார். அதன்படி, எளிதில் வெற்றியை அடைய முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும், ஈரோடு கிழக்கு தொகுதியின் வெற்றி செங்கோட்டையில் எதிரொலிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், திமுக கூட்டணி மாடியில் இருந்து மக்களைப் பார்ப்பவர்கள் எனவும்; அதே நேரத்தில் அதிமுக மக்களோடு மக்களாக நின்று பார்ப்பவர்கள் எனவும் கூறினார்.
ஏற்கனவே, அதிமுக பிரசாரம் தொடங்கி நடைபெற்று வருவதாகவும், அதிமுகவைப் பொறுத்தவரையில் தேர்தல் பணி தீவிரமாக மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், 'வேட்பாளர் அறிவித்த பின்னர் இன்னும் பணிகள் வேகமாக நடைபெறும். மாற்றம் தேவை என மக்கள் நினைக்கிறார்கள். இந்த தேர்தல் முடிவு நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்' என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: "சேது சமுத்திரம் திட்டம் பொருளாதாரத்தை உயர்த்தும்" - வைகோ