ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பெரியார் திடலில் நடைபெற்ற முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், 'தமிழ்நாட்டில் 1977ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தைக் கொண்டு வந்து ஒரு வரலாற்றைப் படைத்தார்.
பின்னர், ஜெயலலிதா 1993ஆம் ஆண்டு தொட்டில் குழந்தைத் திட்டத்தைக் கொண்டு வந்தார். இதை அன்னை தெரசா உட்பட பல உலகத் தலைவர்கள் அனைவரும் பாராட்டினார்கள். தொடர்ந்து அவர் ஆட்சியில் இருந்த போது பெண் குழந்தைகள் பிறந்தால் அதற்கு அம்மா பெட்டகம் முதல் வைப்பு நிதி, திருமண உதவித்தொகை, தாலிக்குத் தங்கம், மிக்சி, கிரைண்டர், ஃபேன் உட்பட பல்வேறு திட்டங்களை தமிழ்நாட்டில் கொண்டு வந்து நிறைவேற்றினார்.
தற்போது, அவரது வழியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த ஆட்சி அமைந்தது. திமுக ஆட்சியில் இருந்தவரையில் இஸ்லாமியர்களுக்கு ஹஜ் பயணத்திற்கான எந்த நிதியுதவியும் வழங்கவில்லை. அவர்களைப் போராட்ட களத்திற்கு மட்டுமே திமுக பயன்படுத்தி வந்தது. மசூதிகளில் ஓதும் உலமாக்களுக்கு மாத ஓய்வூதியம் 1,500 ரூபாயிலிருந்து மூவாயிரமாக உயர்த்தப்பட்டது. ஹஜ் பயணம் செல்பவர்களுக்காக 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களை காப்பது அதிமுக அரசு தான். இன்று மட்டுமல்ல என்றும் இஸ்லாமிய மக்களுக்காக குரல் கொடுப்போம்.
ஸ்டாலினை கடுமையாகத் தாக்கி பேசிய செங்கோட்டையன் முதலமைச்சர் விவசாயம் செய்வதை கேலி செய்யும் ஸ்டாலினுக்கு விவசாயத்தைப் பற்றி என்ன தெரியும். அவர் ஒரு விவசாயி என்பதால், விவசாயி தோற்றத்துடன் படம் வெளியிடுகிறார். எதிர்க்கட்சித் தலைவருக்கு டிராக்டர் ஓட்டத் தெரியுமா? அல்லது விவசாயத்தைப் பற்றி ஏதாவது தெரியுமா? நீங்கள் எப்படி வயலில் நடப்பது போன்றும் டீ குடிப்பது போன்றும் படம் எடுத்து வெளியிட்டீர்கள்? மனம் நொந்து கேட்கிறேன். எத்தனை நாள் ஸ்டாலின் டீ கடைக்குச் சென்று டீ குடித்தார்" என்று ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
இதையும் படிங்க: ஆந்திர போலீஸால் பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட கணவனை மீட்டுத்தரக்கோரி மனைவி மனு!