ஈரோடு மாவட்டத்தில் கடந்த வாரம் டீச்சர்ஸ்காலனி, ஈ.பி.பி நகரில் பூட்டியிருந்த வீடுகளின் பூட்டை அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 63 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து விசாரணை மேற்கொள்ள காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு காவல் துறையினர் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், தனிப்படை காவல் துறையினர் சம்பத் நகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் காவலர்களை கண்டதும் அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளார்.,
இதைக் கண்ட காவலர்கள் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அதில், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பதும், கரூர், சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் பத்திற்கும் மேற்பட்ட வழக்குகளில் ஏற்கனவே சிறைக்குச் சென்று வந்ததும் தெரியவந்தது.
அதேபோல், கடந்த மாதம் சிறையில் இருந்து வெளியே வந்த சுரேஷ் தற்காலிகமாக ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் அறையில் வசித்து வந்ததும், பகல் முழுவதும் பூட்டி இருக்கும் வீடுகளை குறிவைத்து நோட்டமிட்டு இரவில் வீடுபுகுந்து கொள்ளை அடித்துவந்ததும், ஈ.பி.பி நகர், டீச்சர் காலனியில் கொள்ளையடித்ததும் தெரியவந்தது.
மேலும் விசாரணையில், திருடிய நகைகளை நாமக்கல், பள்ளிபாளையம் பகுதியில் விற்றும், அடகு வைத்தும் உல்லாசமாக இருந்து வந்துள்ளதும், நகை விற்ற பணத்தில் கொடுமுடி அருகே வீட்டுமனை வாங்கியதும் தெரியவந்துள்ளது.
மீட்கப்பட்ட 63 சவரன் நகைகள் பின்னர் தனிப்படை காவல் துறையினர் அவரிடமிருந்து சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான 63 சவரன் தங்க நகைகளை மீட்டு சுரேஷை கைது செய்தனர். இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், "சிசிடிவி காட்சிகள் உதவியுடன் குற்றவாளியை எளிதில் பிடிக்கமுடிந்ததது. பொதுமக்கள் வீடுகள், தெருக்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க:சீர்காழி நகைக் கொள்ளை: காவல் துறையினருக்கு நகை வியாபாரிகள் சங்க மாநில தலைவர் பாராட்டு!