jacto geo protest in erode ஈரோடு : தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் என 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கடந்த 2003ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,
காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு மற்றும் உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை வழங்க வேண்டும், அரசின் பல்வேறு துறைகளில் 30 சதவீதத்திற்கும் மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும், 21 மாத ஊதியம் மாற்று நிலுவைத் தொகை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள் ஆகியோருக்கு மறுக்கப்பட்டுள்ளது உடனடியாக வழங்க வேண்டும், சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தினை பணிக் காலமாக வரன்முறை படுத்த வேண்டும்,
உள்ளாட்சி அமைப்புகளிலும் பல்வேறு அரசுத் துறைகளிலும் தனியார் முகமை மூலம் பணியாளர்களை நியமனம் செய்வதைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், கோரிக்கை அடங்கிய பதாகைகளை கழுத்தில் அணிந்து கொண்டும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதையும் படிங்க:ரயில் மோதி யானைகள் உயிரிழப்பை தவிர்க்க திட்டம்! ரயில் பாதைகளில் செயற்கை நுண்ணறிவு கேமரா பொருத்தி சோதனை!