ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உறவினர் வீட்டிற்கு வந்திருந்த பாஜக பிரமுகரும், நடிகருமான எஸ்.வி. சேகர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெற்று அதிமுக 3ஆவது முறையாக ஆட்சியமைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு 9, 10, 11 ஆகிய வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவித்துள்ளது. விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி என பல திட்டங்களை அதிமுக அரசு அறிவித்துள்ளது.
இந்தத் தேர்தலில் பாஜக என்னைப் பயன்படுத்திக்கொண்டால் அவர்களுக்குத்தான் நல்லது. என்னை அழைப்பார்கள் என்ற நம்பிக்கையோடு உள்ளேன். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் ஒழுக்கம், தகுதி, பின்புலம் ஆகியவற்றை பார்த்து, தெரிந்து கொண்டுதான் தமிழ்நாட்டு மக்கள் வாக்களிப்பார்கள்.
வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு ஒதுக்கீடு கொடுத்ததால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. அதேநேரம் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீட்டை யார் வழங்குவதாக கூறுகிறார்களோ அவர்களுக்கு இந்தத் தேர்தலில் அதிக வாக்குகள் கிடைக்கும்.