ஈரோடு: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோடு மாவட்டம் அரச்சலூர் ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலை திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்பு பெண் குழந்தைக்கு வீரமங்கை வேலுநாச்சியார் என்று பெயர் வைத்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அக்னிபாத் திட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், அந்த திட்டம் ஆபத்தான திட்டம் என்று மிகவும் மோசமான பின் விளைவுகள் ஏற்படுத்தும் என்றார். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வீரர்களை தேர்வு செய்து அப்புறம் திருப்பி அனுப்புவது சரி இல்லை. ஓய்வூதியம் கிடைப்பது மிச்சமாகும் என்று நினைக்கிறார்கள்.
வெளியில் வரும்போது ஒரு வீரருக்கு 12 லட்சம் ரூபாய் கொடுப்பதாக கூறுகிறார்கள், அதற்கு ஏது பணம். நாட்டின் பாதுகாப்புக்கு ஆள் எடுத்தால் பாதுகாப்புக்கு தான் ஆள் எடுக்க வேண்டும். 4 ஆண்டுகள் கழித்து வெளியில் வந்து என்ன செய்வார்கள். எம்ஏ, எம்பிஏ படித்தவர்கள் எல்லாம் தெருவில் சுற்றுகிறார்கள். இதில் பெண்களுக்கு 20 விழுக்காடு இடம் ஒதுக்கீடு கொடுப்பதாக கூறுகிறார்கள்.
இந்த அக்னிபாத் திட்டத்தில் எத்தனை இஸ்லாமியர்கள் எத்தனை கிறிஸ்தவர்களை சேர்ப்பீர்கள். இது ராணுவத்திற்கு பாதுகாப்பிற்காக ஆள் எடுப்பதாக அர்த்தம் என்றும் இல்லை ஆர்எஸ்எஸ்-க்கு ஆள் எடுப்பதாகத்தான் அர்த்தம். அதிமுகவில் நிலவும் பிரச்சினை அவர்கள் பிரச்சினை. ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் அவர்களுக்குள்ள பிரச்சினையை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.
மேலும், தமிழ்நாட்டை இரண்டாக பிரிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “இருக்கிற எல்லையை விரிவாக்கம் செய்ய வேண்டும். நாங்கள் இழந்துவிட்ட நிலத்தை மீட்க வேண்டும். இருக்கிற வளங்கள், நிலத்தை பாதுகாத்து எதிர்காலத் தலை முறைக்கு வைத்து விட்டு வைக்க வேண்டும்” என்றார்.