ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணை அடர்ந்த வனப்பகுதியின் அருகில் அமைந்துள்ளது. இந்த அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான கடம்பூர் குன்றி, மல்லியம்மன் துர்க்கம் விளாங்கோம்பை, கம்மனூர் உள்ளிட்ட வனப்பகுதிகளில் நேற்று அதிகாலை பெய்த கனமழையினால் காட்டாற்றுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதனால், அணையின் முழுக் கொள்ளவான 42 அடியும் நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் குண்டேரிப்பள்ளம் பாசன விவசாயிகள் சார்பில் புன்செய் பாசத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில் அணையின் இடது, வலது கரை வாய்க்கால்களுக்கு வருகின்ற 12ஆம் தேதி தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.