ஈரோடு:பவானிசாகர் அணையில் இருந்து ஏப்ரல் மாதம் தடப்பள்ளி அரக்கன்கோட்டை வாய்க்கால்களிலிருந்து முதல் போக பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கப்பட்டதால் கோபி, அந்தியூர் மற்றும் பவானி பாசனப்பகுதியில் 24 ஆயிரம் ஏக்கரில் முதல் போக நெல் சாகுபடி தொடங்கியது.
3 மாத பயிரான ஏ.எஸ்.டி., 16 (இட்லி குண்டு), ஏ.டி.டி. சன்ன ரகம் 45, சம்பா, பொன்னி உள்ளிட்ட ரகங்கள் தற்போது அறுவடைக்குத் தயாராகியுள்ளன. தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனப் பகுதிகளான பங்களாபுதூர், என்.பாளையம், பாரியூர், வெள்ளாளபாளையம் உள்ளிட்டப் பகுதிகளில் கூலி ஆட்கள் பற்றாக்குறை காரணமாக இயந்திரம் மூலம் நெல் அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
விவசாயிகள் தங்கள் அறுவடை செய்யும் நெல்லை கொள்முதல் செய்வதற்காக, கோபிசெட்டிபாளையம், கூகலூர், நஞ்சகவுண்டன்பாளையம், புதுவள்ளியாம்பாளையம், புதுக்கரைபுதூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.