ஈரோடு:சட்டப்பேரவைத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களான சித்தோடு சாலை மற்றும் போக்குவரத்து பொறியியல், தொழில்நுட்ப கல்லூரி மற்றும் கோபிசெட்டிபாளையம் கோபி கலை அறிவியல் கல்லூரியில் மூன்று அடுக்கு பாதுகாப்புடன் தனி அறையில் சட்டப்பேரவைத் தொகுதிவாரியாக வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணிக்கு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். மேலும், வாக்கு எண்ணும் மையத்தினை கண்காணிக்க ஏதுவாக சித்தோடு சாலை மற்றும் போக்குவரத்து பொறியியல், தொழில்நுட்ப கல்லூரியில் 96 சிசிடிவி கேமராக்களும், கோபி கலை அறிவியல் கல்லூரியில் 32 சிசிடிவி கேமராக்களும் என மொத்தம் 128 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு தலா 8 வீதம் 16 எல்.இ.டி. தொலைக்காட்சிகள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.