ஈரோடு:கொடுமணல் கிராமத்தில் மண்ணில் புதைந்து கிடந்த தமிழர்களின் பண்டைய நாகரீகங்களை தோண்டி எடுத்தவரும், தமிழ்நாட்டின் தலைசிறந்த கல்வெட்டு ஆய்வு அறிஞராக விளங்கிய புலவர் செ.ராசு உடல் நிலை பாதிக்கபட்டு கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 9) காலமானார். அவருக்கு வயது 85. இந்த நிலையில், இவரது உடலுக்கு பல்வேறு தரப்பினரும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
ஈரோடு பெருந்துறை சாலையில் புதிய ஆசிரியர் குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த புலவர் செ.ராசு, கடந்த 1938ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள வெள்ளமுத்து கவுண்டன்வலசு என்னும் ஊரில் பிறந்தார். இவர் திருப்பனந்தாள் செந்தமிழ் கல்லூரியில் வித்வான் பட்டத்தை முடித்தார்.
அத்துடன் சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டங்களை பெற்ற இவர், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ‘கொங்கு நாட்டு வரலாற்றில் சமண சமயம்’ என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். ஈரோட்டில் தமிழாசிரியர் பணியைத் தொடங்கி தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் பணிபுரிந்தார்.
பிறகு, தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இணைந்து கல்வெட்டு தொல்லியல் துறையில் துறை தலைமை பொறுப்பை ஏற்று திறம்பட ஆய்வுப் பணியை மேற்கொண்டு வந்தார். கல்வெட்டறிஞர், பேரூராதீன புலவர், கல்வெட்டியல், கலைச்சம்மல், திருப்பலிச் செம்மல் உள்ளிட்ட பட்டங்கள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.