ஈரோட்டில் மக்களின் நீராதாரமாக உள்ள பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 105 அடியாகவும் நீர் இருப்பு 32.8 டிஎம்சியாகவும் உள்ளது. இந்த அணையின் மூலம் கீழ்பவானி வாய்க்காலில் 1 லட்சத்து 3,500 ஏக்கர் விளைநிலங்களுக்கும், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் வாய்க்காலில் 40 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.
சமீபத்தில் நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அக்டோபர் 11ஆம் தேதி முழுகொள்ளளவான 105 அடியை எட்டியது. இதையடுத்து, கடந்த அக்டோபர் 16ஆம் தேதி முதல் டிசம்பர் 26ஆம் தேதிவரை முதல்போக பாசனத்துக்கு 24 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ஆனால், ஜனவரி மாதத்திலும் அணை நீர்மட்டம் முழுகொள்ளளவுடன் நீடிப்பதால் இரண்டாம் போக பாசனம் எள்,கடலை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.