அரசு விழாக்களில் திமுக கட்சி பிரதிநிதிகள் - கே.ஏ.செங்கோட்டையன் குற்றச்சாட்டு ஈரோடு:சத்தியமங்கலம் தனியார் நர்சிங் கல்லூரி மற்றும் மக்கள் சட்ட இயக்கம் சார்பில் மாணவிகளுக்கு ஒரு நாள் சட்டப் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை முன்னாள் அதிமுக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்து மாணவிகளிடம் சட்ட விழிப்புணர்வு குறித்து சிறப்புரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது சத்தியமங்கலத்தில் வாடகை கட்டத்தில் நீதிமன்றம் இயங்கி வருவதையும், அதற்கு சொந்த கட்டடம் கட்டுவதற்கு தேவையான நடவடிக்கை குறித்தும் பேசிய அவர், “இதற்காக உங்கள் சட்டமன்ற உறுப்பினர் நம்முடைய பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு அருகாமையில் இருக்கக் கூடிய இடத்தை கேட்டு இருக்கிறார்.
அது ஓரப் பகுதியாக இருக்கும் காரணத்தால் அதை விரிவுபடுத்துவதற்கும், ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இதற்கு முன்பு நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் குரல் எழுப்பி இருக்கிறார். அதற்கான நடவடிக்கையினை மேற்கொள்வோம்.
வருகிற ஆண்டில் அதற்காக சட்டத்துறை அமைச்சரிடத்தில் பேசி, விரைவாக கடிதங்கள் அனுப்பி உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கு, இன்னும் ஒருமாத காலத்தில் அதற்கான பணிகளைத் தொடங்குவதற்கு, ஆயத்தப் பணிகளை மேற்கொள்வதற்கு நாங்கள் முயற்சிகள் மேற்கொள்வோம்.
சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றபோது திமுகவில் இருக்கக் கூடிய ஒன்றியச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், அரசு பொறுப்பில் இல்லாதவர்கள் பூமி பூஜை போடுவதும், திறப்பு விழா செய்வதற்கு அழைத்து வருவதும் சரியானது அல்ல என்று மாவட்ட ஆட்சித் தலைவரிடத்தில் நாங்கள் தெரிவித்து இருந்தோம். அரசு பொறுப்பில் இருக்கக் கூடிய சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், உள்ளாட்சியின் ஒன்றியத் தலைவர்கள், 50 ஆயிரம் குழுவின் உறுப்பினர்கள், 5 ஆயிரம் ஒன்றியக் குழுவைச் சார்ந்தவர்கள், அப்பகுதி ஊராட்சி மன்றத் தலைவருக்குத்தான் அந்த உரிமை உள்ளது.
உள்ளாட்சிகள் நடைபெறுகின்ற நிகழ்வுகள் அனைத்தும் அதுபோன்று இருக்க வேண்டும் என்றுதான் சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடத்தில் தெரிவித்தோம். அதுபோல் முதலமைச்சரின் விரிவானத் திட்டம் என்று ஒரு திட்டம் உள்ளது. அந்த திட்டத்தில் எந்த பகுதியை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று எங்களிடத்தில் ஆலோசனை பெற வேண்டும் அல்லது உள்ளாட்சியில் இருக்கக் கூடிய பிரதிநிதியிடம் ஆலோசனை பெற வேண்டும்.
அப்படி இல்லாமல் எங்கோ இருக்கின்ற ஒரு இடத்திற்கு சாலை போடுகிறபோது அதில் பயன் பெறுகின்ற மக்களுடைய எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதுபோன்ற நிலை இருந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் ஆலோசனை பெற வேண்டும். அப்படி பெற்றுதான் இது போன்ற திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம்.
உங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்ன் பின் தங்கிய பகுதியாக இருக்கும் மலைவாழ் மாணவர்கள் வசிக்கும் மலைப்பகுதிகளில் மாணவர்கள் நலனுக்காக விடுதிகள் அமைக்கக் கோரி சட்டமன்றத்தில் பேசினார். அதற்கு இந்த ஆண்டு பணிகள் தொடங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: எலும்பும் தோலுமாக மெலிந்து காட்சியளிக்கும் அரிசிக் கொம்பன் யானை? - வனத்துறை அதிகாரிகள் சொல்வது என்ன?