ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் மேற்கொள்ளப்படும் தேர்தல் பணிகள் குறித்து அமைச்சர்கள் முத்துசாமி, எ.வ.வேலு, கே.என். நேரு உள்ளிட்டவர்கள் தலைமையில் மேட்டுக்கடை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேர்தல் பணிக்குழு ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜன.28) நடைபெற்றது.
இதில், தேர்தல் பணிக் குழுவிற்கு மதச்சார்பற்ற கூட்டணியிலுள்ள காங்கிரஸ் வேட்பாளருக்குப் பிரச்சாரம் மேற்கொள்வதற்கான பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களும், நிர்வாகிகளும் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, சக்கரபாணி, கயல்விழி செல்வராஜ், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மு.பெ.சாமிநாதன், தங்கம் தென்னரசு ஆகியோரும் கட்சியின் முன்னணி நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் பங்கேற்றார். சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதன் பின்னர், திருமண மண்டபத்திலிருந்து அமைச்சர்கள் கிளம்பினர். அப்போது திமுக தலைமை நிலைய முதன்மை செயலாளர் கே.என்.நேரு, 5 மணிக்குத் தேர்தல் அலுவலகம் திறக்கும் நிகழ்வில் பேசுகின்றோம் எனக் கூறிச் சென்றார்.
பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய அமைச்சர் எ.வ.வேலு, திமுக தலைமை நிலைய முதன்மை செயலாளர் நேரு தலைமையில் பகுதி தேர்தல் அலுவலர் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், என்னென்ன பணிகள் செய்ய வேண்டும்? என்பதை முதன்மை செயலாளர் அறிவுறுத்தியுள்ளதாகவும், வரும் பிப்.1 ஆம் தேதி செயல் வீரர் கூட்டம் நடைபெற உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.