ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள முளியனூரைச் சேர்ந்தவர் முனுசாமி (32). தொப்பபாளையத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பவரின் மகள் ரம்யா (25). இவருக்கும், முனுசாமிக்கும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கட்டட தொழிலாளிகளான இவர்களுக்கு சுகதீஸ்வரன் (5) என்ற ஆண் குழந்தை உள்ளது.
முனுசாமிக்கும், ரம்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால், ரம்யா தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார். இதையடுத்து ரம்யாவின் பெற்றோர் அவரை சமாதானம் செய்து, கணவர் வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். மீண்டும் கணவருடன் வசித்துவந்த நிலையில், ரம்யா கர்ப்பமாகினார். இது குறித்து முனுசாமி ஜோதிடம் பார்க்கச் சென்றபோது, ரம்யாவுக்கு 2ஆவது குழந்தை பிறந்தால் முனுசாமியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஜோதிடர் கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த முனுசாமி, கருவை கலைக்குமாறு மனைவியிடம் கூறினார். ஆனால், அதற்கு ரம்யா மறுப்பு தெரிவித்தார்.
இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு முற்றியது. பின்னர், மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த முனுசாமி, மீண்டும் கருவை கலைக்குமாறு மனைவியிடம் கூறினார். ஆனால், தொடர்ந்து மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த முனுசாமி, ரம்யாவை அடித்து துன்புறுத்தினார். தொடர்ந்து, அவருடைய கழுத்தில் இருந்த தாலி கயிற்றை இழுத்துக்கொண்டு, காலால் கர்ப்பிணியை எட்டி உதைத்துள்ளார். இதில், ரம்யா வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார்.