ஈரோடு மாவட்டம் பழையபாளையம் பகுதியில் உள்ள அன்னை நகர் குடியிருப்புப் பகுதியில் வசித்துவருபவர் சுந்தரம் - ஜமுனாராணி தம்பதியினர். இவர்களுக்கு கார்த்திகேயன் என்ற மகனும், சந்தியா என்ற மகளும் உள்ளனர்.
தம்பதியினரிடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த சுந்தரம் அருகில் கிடந்த விசைத்தறி இயந்திரத்துக்கு பயன்படுத்தும் கட்டையால் ஜமுனாராணியை சரமாரியாகத் தாக்கி கொலை செய்துள்ளார்.
பின்னர் மதுரையில் உள்ள தனது மகன் கார்த்திகேயனுக்கு போன் செய்து நடந்தவற்றை கூறியுள்ளார். கார்த்திகேயன் அளித்த தகவலின் பேரில், சுந்தரத்தின் வீட்டிற்குச் சென்ற சூரம்பட்டி காவல் துறையினர் வீட்டின் கதவை திறந்துபார்த்தபோது, ரத்தக் காயங்களுடன் சுந்தரம் வெளியே வந்து மனைவியை கொலைசெய்துவிட்டதாக காவல் துறையினரிடம் கூறியுள்ளார்.
மனைவி கட்டையால் அடித்து கொலை செய்த கணவன் கைது இதையடுத்து ரத்தக் காயங்களுடன் இருந்த சுந்தரத்தை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த காவல் துறையினர், ஜமுனாராணியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தக் கொலை தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: காவல் துறையினரை தாக்கிய நபர்கள் - சிசிடிவி காட்சி!