ஈரோடு: ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரம் பகுதியில் வசித்து வருபவர், லீலா கிருஷ்ணன். இவரது மனைவி ஸ்ரீஜா. இவர்களுக்கு 5 வயதில் ஜாஸ்மிதா என்ற மகளும், 4 வயதில் ஜஸ்வந்த் என்ற மகனும் உள்ளனர். தனியார் கால்டாக்ஸி ஓட்டுநரான லீலா கிருஷ்ணனுக்கு, மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று (டிச.25) நள்ளிரவு ஸ்ரீஜா-விற்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதாகக் கூறி, ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவித்து உள்ளனர். அந்த தகவலின் பேரில், லீலா கிருஷ்ணன் வீட்டிற்கு ஆம்புலன்ஸுடன் வந்த மருத்துவ ஊழியர்கள், ஸ்ரீஜாவை பரிசோதித்துப் பார்த்தபோது, அவர் உயிரிழந்திருப்பது தெரிய வந்துள்ளது.
இதனை அடுத்து, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் உடற்கூறு ஆய்விற்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இது குறித்து மருத்துவர்கள் வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து உள்ளனர். மருத்துவர்கள் கொடுத்த இந்த தகவலின் அடிப்படையில் மருத்துவமனைக்குச் சென்ற போலீசார், இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது லீலா கிருஷ்ணனின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த போலீசார், அவரிடம் தொடர்ந்து குறுக்கு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த விசாரணையின்போது, நேற்று (டிச.25) இரவு மது போதையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக லீலா கிருஷ்ணன் ஒப்புக் கொண்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக, லீலா கிருஷ்ணனை கைது செய்த போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்று, தேவையான தடயங்களைச் சேகரித்து, அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:ஈரோடு: மங்கி குல்லா அணிந்து கைவரிசை காட்டிய பைக் திருடர்கள் - வைரலாகும் சிசிடிவி!