மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இதன் தொடர்ச்சியாக சென்னை வண்ணாரப்பேட்டையில், பிப்.14ஆம் தேதி அச்சட்டத்தை எதிர்த்து காலவரையற்ற போராட்டம் நடைபெற்றது. அன்று நள்ளிரவில் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட பலர் மீது தடியடி நடத்திய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதன் நீட்சியாக காவல் துறையின் தடியடி நடவடிக்கையை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற காரணமாக அமைந்தது. இதற்கு அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் பலரும் தங்களது கண்டன குரலை எழுப்பி வருகின்றனர். இது ஒரு பக்கம் இருந்தாலும் இந்து அமைப்பினர் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து போராட்டம் நடத்திவருகின்றனர்.
அந்த வகையில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அதில், "இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை இந்து முன்னணி வரவேற்கிறது. பாகிஸ்தான் பங்களாதேஷ் நாடுகளில் இந்து மக்கள் மதமாற்றம் செய்ததால் 23 விழுக்காடாக இருந்த இந்துக்களின் எண்ணிக்கை 1.6 விழுக்காடாக குறைந்துள்ளது. திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் இஸ்லாமியர்களைத் தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேட முயல்கின்றனர்.
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வண்ணாரப்பேடையில் நடந்த போராட்டத்தின்போது உடல் நலக்குறைவால் ஒருவர் உயிரிழந்ததை மாற்றி தவறான செய்தியைப் பரப்பிவிட்டனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தியதோடு தாராபுரத்தில் இந்துக்கள் தாக்கப்பட்டுள்ளனர். அவர்களைக் கண்டித்து இன்று தாராபுரத்தில் கடையடைப்புப் போராட்டம் நடைபெறும்" என்றார்.
இதையும் படிங்க: 'முடிவெடுக்க பிரதமர் மோடிக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது' - முத்தரசன்