ஈரோடு: இந்துக்கள் குறித்து இழிவாக பேசியதாக திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசாவை கண்டித்தும் அவரை எம்பி பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தியும் இந்து முன்னணி சார்பில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் கடையடைப்பு மற்றும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
கடையடைப்புக்கு ஆதரவு அளிக்காததால் பேக்கரியை அடித்து நொறுக்கிய இந்து முன்னணியினர் அதன்படி நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சத்தியமங்கலம் பகுதியில் கடையடைப்புக்கு ஆதரவு தெரிவிக்குமாறு இந்து முன்னணி சார்பில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. அதேபோல் திமுக சார்பில் கடைகளை வழக்கம் போல் திறக்கலாம் எந்தவித பயமும் தேவையில்லை காவல்துறை பாதுகாப்பு தரும் என துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
இந்நிலையில் சத்தியமங்கலம் நகராட்சி கோட்டு வீரம் பாளையம் பகுதியில் திறக்கப்பட்டிருந்த ராஜதானி பேக்கரிக்கு சென்ற இந்து முன்னணியினர் சத்தியமங்கலம் பகுதியில் கடையடைப்பு நடந்து வரும் நிலையில் எதற்காக பேக்கரியை திறந்து வைத்திருக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினர்.
அதைத் தொடர்ந்து திடீரென பேக்கரிக்குள் புகுந்து கண்ணாடி மற்றும் பொருட்களை அடித்து உடைத்து சேதப்படுத்தினர். இதனால் அதிர்ச்சி அடைந்த பேக்கரி ஊழியர்கள் சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பேக்கரியை அடித்து உடைத்து சேதப்படுத்திய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஈரோடு ஐஆர்டிடி கல்லூரி மாணவி தூக்கிட்டுத்தற்கொலை - போலீஸ் தீவிர விசாரணை