ஈரோடு :தமிழ்நாடு, கர்நாடகத்தை இணைக்கும் முக்கிய வழித்தடமாக திம்பம் மலைப்பாதை திகழ்கிறது. இரு மாநிலங்களில் இருந்தும் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் இவ்வழியாகப் பயணிக்கின்றன. அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகளால் இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதனால் 14 சக்கரங்கள் கொண்ட, 16 டன்னுக்கும் அதிகமான பாரம் ஏற்றிச் செல்லும் கனரக சரக்கு வாகனங்கள் திம்பம் மலைப்பாதை வழியே பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ராஜஸ்தானில் இருந்து மின்சாதனப்பொருட்கள் ஏற்றிய 14 சக்கரம் கொண்ட கனரக சரக்கு லாரி திம்பம் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தது. அப்போது, மலைப்பாதையின் வளைவில் திரும்பும் போது லாரி பழுதாகி நின்றதால், தமிழ்நாடு, கர்நாடகா இடையே ஐந்து மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.